கல்லரையில் தேவை ஒரு மறைக்கல்வி!
Posted By தனிஸ்லாஸ் சாமிக்கண்ணு ச. ச

முன்னுரை:

‘ஒரு பண்பாட்டின் உச்சக்கட்டம் என்பது இறந்த தன் உறுப்பினர்களுக்கு அது தரும் இறுதி மரியாதையில் அடங்கி இருக்கிறது’ என்பார்கள்! வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது எகிப்தியர்களின் ‘பிரமிடுகள்’ நம் நினைவுக்கு வரும். உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலும் ஒரு கல்லறைதானே!

2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற மறைக்கலகங்களில், மறைசாட்சிகளாய் மரித்த கிறித்தவர்களைப் புதைத்த இடத்தை இன்றும் ‘கேட்டகோம்ஸ்’ (நிலத்தடி கல்லறைகள்) என்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகவும், புனித மண்ணாகவும் கருதுகின்றனர். கிறித்தவ எதிர்நோக்கின் பார்வையில் ‘கல்லறைகள் உயிர்ப்பின் மகிழ்ச்சிக்காகக் காத்திருக்கும் உறைவிடங்களே’ என்றால் அஃது மிகையாகாது! மேலை நாடுகளில் கல்லறைகள் பராமரிக்கப்படும் முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது! அஃதொரு செபக்கூடமாகவே காட்சியளிக்கும். அங்குக் கல்லறைகள் ஆலயத்தைச் சுற்றி இருப்பதும் இதற்கு ஏதுவாக இருப்பதும் உண்மை. அழகுற அமைக்கப்பட்ட கல்லறைகள், அவற்றைச் சுற்றி இருக்கும் மரங்கள், பூச்செடிகள், நம்மையுமறியாமல் ஒரு செபச் சூழலுக்குக் கொண்டு செல்லும்.

நாம் மிகுதியாக அன்பு செய்தவர்கள், நம்மைப் பலவகைத் தியாகங்களோடு அன்பு செய்த நமது பெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இறைவனில் துயில் கொள்ளும் புனிதமான இடம் கல்லறைகள். இவற்றை உயிர்த்த இயேசுவின்மேல் கட்டப்பட்டுள்ள கிறித்தவ நம்பிக்கையோடு அணுக வேண்டும்.

இன்றைய தமிழகத்தின் கல்லறைகளின் நிலை:

பெரும்பாலான கிறித்துவக் கல்லறைகள் சீர்கேடாகக் காட்சியளிப்பது கண்கூடான உண்மை! ஆடு மாடுகள் மேய்கின்ற இடமாக, மது அருந்துகின்ற ஒதுக்குப்புறமாக, சூதாடுகின்ற திடலாக, ஏன் அதைவிட அவமானம், மலங்கழிக்கும் ப ொது இடமாகவும் பயன்படுத்தப்படுவது நம்மைப் பெரிதும் பாதித்ததாகத் தெரியவில்லை. பார்த்தும் பார்க்காததுபோல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வருடத்திற்கு ஒருமுறை கல்லறைத் திருவிழாவை முன்னிட்டு நமது உற்றார் உறவினர்களின் கல்லறைகளைத் தூய்மை செய்வது தவிர, மரித்தவர்களின் ஆண்டு நினைவு நாட்களில் விளக்கேற்றுவதோடு நின்றுவிடுகிறது! கல்லறைகளைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும் கலாச்சாரம் இன்னும் நம்மை வந்து சேரவில்லை என்பதுதான் உண்மை!

கல்லறையும் கிறித்தவ எதிர்நோக்கும்:

இறைவன் வாக்கு மாறாதவர்; அவரது வாக்கின் உச்சக்கட்டமாக நிகழ்ந்த இயேசுவின் மனித உருவெடுத்தல், பாடுகள், மரணம், அடக்கம், உயிர்ப்பு ஆகிய இவற்றின் மேல் கட்டப்பட்டதுதான் கிறித்தவ எதிர்நோக்கு. மரணத்தை வென்றவர் கிறிஸ்து! இயேசுவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்குச் சான்றாக உள்ளது (1 கொரி 15 : 20- 22). “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ அவரை வைத்த இடம்” (மாற்கு 19 : 6). உயிர்த்த இயேசு அவரில் மரித்த அனைவருக்கும் முன்னோடியாக இருக்கின்றார்.

“உலக முடிவில் இயேசு கிறிஸ்து மனிதரைத் தீர்ப்பிட வரும்போது, நாம் நமது உடலோடு உயிர்த்தெழுவோம்” என்பது நமது நம்பிக்கை. ‘உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன்’ என்று நாம் அறிக்கையிடும் நம்பிக்கை அறிக்கை ப ொய்யில்லை என்றால், நமது கல்லறைகள் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் புகலிடங்கள். எனவே அவற்றின் தூய்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவது நமது நம்பிக்கையின் பண்பாடாகும்.

திருஅவைக்கு உட்படாத இறப்புச் சடங்குகள், வீட்டுச் சடங்குகள்:

அறியாமல், சிந்திக்காமல் நாம் செய்கின்ற சில சடங்குகளை மட்டும் பார்ப்போம். துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்திற்கு மேளதாளத்தோடு வருகின்ற உறவினர் கூட்டம் எந்த வகையில் தங்கள் ஆறுதலைத் தெரிவிக்க முடியும் என்று தெரியவில்லை. ‘கோடித் துணிகள்’ கொண்டுவருவதன் ப ொருள் என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். சில ப ொருளில்லாச் சடங்குகள் ஆக்கிரமிக்க, செபம் சொல்வதும், பாடல்கள் பாடுவதும் குறைந்துகொண்டே போவதை நாம் உணர்கிறோம். இறைவார்த்தைக்கு எத்தகைய முக்கிய இடத்தைத் தந்திருக்கிறோம்?

கல்லறைத் தோட்டத்திற்குப் பவனி:

இறந்தவர் உடலை கல்லறைக்குப் பவனியாக எடுத்துச் செல்லும்போது ஒரு பெரிய கொண்டாட்டம்! வாணவேடிக்கைகளோடும் மேளதாளத்தோடும் ஆடல் பாடலோடும் இறந்தவர் உடலைப் பகட்டுத்தனமாக எடுத்துச் செல்வதன் ப ொருள் என்ன? தெருமுனையை அடைந்தவுடன் தெருக்களிலே வாடிப்போன மாலையின வதங்கிப்போன பூக்களை எடுத்துப் போட்டுக்கொண்டு போவதன் அர்த்தம் என்ன? அதே பூக்களை வீட்டு வாசலிலிருந்தே ஏன் போடுவதில்லை? தெருமுனையை அடைந்தவுடன் இறந்தவர் உடல் தாங்கிய பாடையைத் தும்பாவிலிருந்து வெளியில் எடுத்துச் சுழற்றுவது அல்லது திசையை மாற்றுவது ஏன்? இவற்றிற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம். அவை காலப்போக்கில் மறைந்து கொண்டே வந்து சடங்குகள் மட்டும் நிலைபெறுகின்றன.

அடக்கச் சடங்குகள்:

தமிழகத்தின் பல இடங்களில் இறந்தவரின் உடலைத் தாங்கியவர்கள் கல்லறையை அடைந்த உடன் உருவாக்கும் குழப்பமும் கொந்தளிப்பும் இறுதிச் சடங்கு செய்யும் குருவானவருக்கு ஒரு பெரும் அறைகூவலாகத்தான் அமைகின்றன. பல ஆண்டுகள் இறையியல் படித்துவிட்டுக் கல்லறையில் அடக்கச் சடங்கு நிறைவேற்ற நின்றுகொண்டிருக்கும் அருட்பணியாளரின் பரிதாப நிலையை நினைத்துப் பார்க்கிறேன். இறந்தவருடைய ஆன்மாவை இறைவனுக்குக் கையளிக்கவும் ‘அவர் இறுதி நாளில் உடலோடு உயிர்ப்பார்’ என்ற நம்பிக்கையோடு அவரது உடலை நிலத்திற்குக் கையளிக்கவும் காத்திருக்கும் அருட்பணியாளருக்குப் புரிந்துகொள்ள முடியாத சடங்குகள் காத்திருக்கும். தலைச்சன் பிள்ளைக்கு மொட்டை அடிப்பார்கள், அந்த முடியைக் கட்டிச் சவப்பெட்டியில் போடுவார்கள். ஏன், எதற்கு என்ற தெளிவு யாருக்கும் இல்லை! சில இடங்களில் வாயில் பால் ஊற்றுவார்கள், நெல் போடுவார்கள், மண் உருண்டை செய்து அதைச் சவப்பெட்டியில் வைப்பார்கள். சடங்குகள் இவ்வாறு இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. இவற்றில் எவை ப ொருளுள்ளவை, எவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பவை என்று இனம் புரிந்துகொள்வது அவசியம்.

திருஅவை நமக்கு அளிக்கும் பரிந்துரையின்படி அடக்கச் சடங்குகள் பலவகையான மரபுகளுக்கேற்ப இருப்பினும், அவை ‘இறந்தவர் உயிர்த்தெழுவர்’ என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மேலும் அவை இயேசுவின் ‘பாஸ்கா’ மறைப ொருளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

கல்லறையும் மனிதநேயமும்:

2004ஆம் ஆண்டுப் பிரான்ஸ் நாட்டில் யூத மதத்தைச் சார்ந்த கல்லறைகளை உடைத்து இழிவுபடுத்தினார்கள் நாசிசக் கொள்கையில் ஊறித் திளைத்த இளைஞர்கள். இதை ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் கடுமையாகக் கண்டித்தன.

இதனை ‘ஐரோப்பிய பண்பாட்டின் அழிவின் தொடக்கம்’ என்று இறை விசுவாசம் இல்லாதவர்களாலும் சொல்லப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் இந்து அடிப்படைவாதத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகள் கிறித்தவக் கல்லறைகளை உடைத்தபோது தமிழகத் திருஅவை குரலெழுப்பியது நமது நினைவிலிருக்கும் என்று நினைக்கின்றேன்.

‘சமரசம் உலாவும் இடமே’ என்ற திரையிசைப் பாடல், கல்லறைகள் ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி நாம் அனைவரும் ஒரே தரமான மனிதர்கள் என்ற மாபெரும் உண்மையைப் பறைசாற்றுகின்றது. எல்லாரும் பாகுபாடு இல்லாமல் போய்ச் சேர வேண்டிய இடம் கல்லறை மட்டும்தான் என்றால் அது மிகையாகாது. இந்த இடத்திற்கும் சாதிச் சாயம வைத்துக்கொண்டு கிறித்தவர்களாக எப்படி வாழ முடியும் என்று சிந்திப்போம்.

தமிழகத்தின் பெருவாரியான கிறித்தவப் பங்குகளைச் சார்ந்த கிராமங்களில் பெண்கள் அடக்கச் சடங்கிற்குக் கல்லறை வரை அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் இன்னும் சரியாக விளக்கப்படவில்லை! ‘வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரைப் பிள்ளை, கடைசிவரை யாரோ…’ என்ற பட்டினத்தாரின் கருத்துகள் மனித மாண்புக்கு எதிராக ஒலிப்பதை நாம் அறிந்தும் அறியாததுபோல் இருந்துவிடுகிறோம்.

கல்லறையும் கலாச்சாரமும்:

கலாச்சார வெளிப்பாடுகள் காலம் கடந்து நம்மைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் வேர்கள். அவற்ற பூசிவிட்டுக் கிறித்தவர்களாகிய நாமும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு கீழ்மையானது என்பதை நம்மில் பலர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருஅவையும் இதைச் சகித்துக்கொண்டிருப்பதாகத்தான் உணர்கிறோம். சாதிக்கொரு கல்லறை என்ற அவ்வளவு எளிதாகப் பிடுங்கி எறிந்துவிட முடியாது. கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளையும் மதக்கோட்பாடுகளின் வெளிப்பாடுகளையும் அவ்வளவு எளிதாகப் பிரிக்கவும் முடியாது. அவை இரண்டும் ஒன்றோடொன்று கலந்து எது கலாச்சாரம், எது மதம் என்று அடையாளம் கண்டுகொள முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்துள்ளன. கல்லறைக் கலாச்சாரத்தில் நாம் கடைப்பிடிக்கும் சடங்குகள் எந்த மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்தவை என்பதையும், அதைப் பின்பற்றும் நமக்கு அதைப் பற்றிய புரிதல் உண்டா என்பதையும் அறிய, சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ப ொருளுள்ள சடங்குகள் இருப்பின் அவற்றைக் கிறித்தவ எதிர்நோக்குக் கோட்பாட்டோடு இணைக்க முயலுவோம். நாம் பின்பற்றும் சடங்குகள் ப ொருளற்றவை எனில் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வோம். மூடப்பழக்கங்கள் இருப்பின் அவற்றைக் களைவோம்.

பன்முக உரையாடலின் அவசியம்:

கலாச்சாரத்திற்கும் மதக்கோட்பாடுகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பின் பன்முக உரையாடல் தேவையாகிறது. திருஅவையின் தலைவர்கள், மக்களின் பிரதிநிதிகள், கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நன்கு அறிந்து தெளிந்தவர்கள், ப ொதுமக்கள் இவர்களுக்கிடையே நமது கிறித்தவ எதிர்நோக்குப் பற்றிய ஒரு நல்ல புரிதல் தேவை. தல ஆயர்கள் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

முடிவுரை:

உயிரோடு இருப்பவர்களே கூரை வீடுகளில் வாழும்பொழுது இறந்துபோனவர்களுக்கு ஏன் சொகுசான இடம்’ என்று கேட்பதில் நியாயம் உண்டு! ஆனால் கூரை வீடுகளில் வாழும் கிராம மக்கள் கோடிக்கணக்கில் பணம் திரட்டிக் கோவில்கள் கட்டும்போது கல்லறைகளைத் தூய்மையாகவும் அழகுறவும் பாதுகாக்கப் பணம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது! கல்லறைகளின் அவலநிலை நமது நம்பிக்கையின் ஆழமற்ற நிலையையும் மேலோட்டமான கிறித்தவ வாழ்வையும் காட்டும் அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டும்.

உயிர்த்த இயேசுவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாகிய நாம் நம் கல்லறைகளின் சூழலை மாற்றி அமைத்தாக வேண்டும்.

கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நமது உடலைத் தூய ஆவியாரின் ஆலயம் என்று அழைக்கின்றோம். கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட இருக்கும் இறந்தவரது உடல், தூய ஆவியாரின் ஆலயமெனில், அதற்கு நாம் தரும் மரியாதை, அதை அடக்கம் செய்யும் இடத்திற்க நாம் தரும் மரியாதை. இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘தங்களது உயிர்ப்பிற்காகக் காத்திருக்கும் தூய ஆவியின் ஆலயங்கள் துயில்கொள்ளும் புனித பூமிதான் கல்லறைகள்’ என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அசுத்த ஆவிகள் குடிகொண்டிருக்கும் இடமாகக் கல்லறைகளைப் பார்த்து அச்சம் கொள்கின்ற நிலை, கிறித்துவ நம்பிக்கைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறு வயதிலிருந்தே நமது குழந்தைகளுக்கு இவற்றைப் படிப்பிக்க வேண்டும். இறப்பிற்கு இயேசு தந்த புதிய ப ொருள், அவரது உயிர்ப்பில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கை, மறு வாழ்வு அல்லது நிறைவாழ்வு பற்றிய இறையியல் புரிதல் ஆகியன நமது அன்றாட வாழ்வின் பட்டறிவில் கலக்க வேண்டும். இறப்பை, அதனோடு இணைந்த சடங்குகளைக் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும். கல்லறை வரையில் கிறித்துவ எதிர்நோக்குப் பார்வையில் மனிதநேயம் காப்போம்.

All Features

    Author

    Contact person

    தனிஸ்லாஸ் சாமிக்கண்ணு ச. ச

    Events