அமெரிக்க இராணுவத்தில் உயர்ந்த பதவியிலமர்ந்து பணியாற்றி வந்த, தம் ஒரே மகன் சாமுவேல், ‘தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டான்’ என்ற செய்தியைக் கேட்டவுடன், அந்தப் பணக்காரத் தந்தை செயலிழந்து போனார். மனமுடைந்த நிலையில், அவர் தம் சொத்துகளையும் மற்றும், தாம் பாதுகாத்து வந்த ஏராளமான கலைநயம் மிக்கப் பொருட்களையும், ஏலக் கடைக்காரரிடம் ஒப்படைத்தார். ஏலம் தொடங்கும் நேரத்தில் அங்கு வந்த பெண் ஒருத்தி, தம்மைச் ‘சான்ரா’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தாம் மரித்த சாமுவேலின் தோழியென்றும், உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலியென்றும் கூறி, தமது துயரை வெளிப்படுத்தினார்.
ஏலம் தொடங்கியது. முதலில் மரித்த சாமுவேலின் புகைப்படம் ஏலத்திற்கு வந்தது! இதற்குச் சந்தை மதிப்பு எதுவுமேயில்லாத காரணத்தால், யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை, மாறாகச் சிலர், இது ‘ஜூலியஸ் சீசர்’படம் என்று கேலியும் கிண்டலுமாகப் பேசினார்கள்.
அப்போது சான்ரா ஓடிவந்து, “இதை நான் வாங்கிக்கொள்கிறேன்!” என்றார். படத்தை வேறு யாருமே கேட்காத நிலையில், படம் ரூ.1000க்கு ஏலம் போனதாகக் கூறி, அவளிடம் ஒப்படைக்கப்பட்டது. மறு நிமிடம், ஏலம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது! அதைக் கேட்டவுடன் “இஃது என்ன ஏமாற்று வேலை?” என்று பலரும் கத்தினார்கள். காரணம் கேட்டுச் சிலர் கலகத்திலும் ஈடுபட்டனர். அதற்கு நிர்வாகிகள், “எழுதப்பட்ட விருப்ப ஆவணத்தின்படியும், (உயில்) உரிமையாளரின், விருப்பப்படியும், யார், மகன் சாமுவேலின் படத்தை, விரும்பி வாங்கிக் கொள்கிறார்களோ, அவர்களே மற்ற எல்லாச் சொத்துகளுக்கும் உரிமையாளராகி விடுகின்றார்.படத்தைச் சான்ரா, வாங்கிக்கொண்ட காரணத்தால், எல்லாப் பொருட்களும் சொத்துகளும் அவருக்கே உரிமையாகிவிட்டன. அதன் காரணமாகத்தான், மேலும் எங்களால் ஏலம்விட முடியவில்லை” என்று கூறினார்களாம். அங்குக் கூடியிருந்தவர்கள், சான்ராவைப் பார்த்து, “நற்பேறாளர், சான்ரா!” என்று கூறி, வாழ்த்திவிட்டுச் சென்றனராம்.
ஆனால் நீங்களும், நானும் சான்ராவைவிட நற்பேறாளர்கள், உரிமை பெற்றவர்கள்; எப்படித் தெரியுமா?
நம் தந்தையாம் கடவுளின் விருப்பப்படி,யாரெல்லாம் தம் மகன் இயேசுவை அன்பு செய்து, நம்புகின்றார்களோ, அவர்கள் அனைவரும் கடவுளுடைய பிள்ளைகளாகும்படி உரிமை தந்திருக்கிறாரல்லவா? (யோவான் 1:12)
இறைமகனான இயேசு எவரும் காணக்கூடாத கடவுளின் உண்மையான சாயல் என்று கொலோசையர் 1:15இல் படிக்கிறோமல்லவா, அந்தச் சாயலை, வடிவத்தை நாம் ஏலக் கடையில் அல்ல, நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக, நம் உள்ளத்தில் பெற்றுவிட்டோம். இதன் வழியாக நாம் விண்ணகமகிமையையும், வாக்குறுதிகளையும், ஆசீர்வாதங்களையும், அன்பளிப்பாகப் பெற்றிருக்கிறோம்.
இந்த மகிழ்ச்சியைத்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவிலும் கொண்டாடி வருகிறோம். இந்த மகிழ்ச்சியின் காரணத்தை நம்மில் சிலர் இன்னும் அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மைதானே!
“கிறிஸ்துமஸ், என்றால் என்ன?” என்று நம் பிள்ளைகளிடம் கேட்டுப் பாருங்கள். உடனே “அஃது ஒரு பண்டிகை” என்பார்கள். “அன்று பள்ளி விடுமுறை நாள், புதிய ஆடைகள், புதுவகை இனிப்புகள் கிடைக்கும் நாள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் எங்களுக்கு அன்பளிப்புகள் தருவார்கள்”என்பார்கள்.
பெண்களிடம் கேட்டால், “நாம் கிறிஸ்தவர்கள் அல்லவா, கண்டிப்பாக ‘கிறிஸ்துமஸ்’ நாளைக் கொண்டாட வேண்டும். புதிய புடவைகள், நகைகள், அன்பளிப்புகள் கண்டிப்பாக வேண்டும். அப்பாவிடம் புதிய ‘கைபேசி’ வாங்கித்தரக் கேட்டிருக்கிறேன்”என்பார்கள்.
இதற்குக் குடும்பத் தலைவர்களின் மறுமொழி, கொஞ்சம் வருத்தம் கலந்து வெளிப்படும். “வீட்டிற்கு வர்ணம் பூசவேண்டும், கிறிஸ்துமஸ் நட்சத்திரம், குடில், மரம் எல்லாம் அமைக்க வேண்டும். எல்லாருக்கும் புதிய ஆடைகளும் இனிப்புகளும் அன்பளிப்புப் பொருட்களும் வாங்க வேண்டும். பிற மத நண்பர்களுக்குப் ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்ய வேண்டும் என்பார்கள்!” இதன்படி நாம் இயேசு உலகில் பிறந்த நோக்கத்தை மறந்து விடுகிறோம் அல்லது அசட்டை செய்கிறோம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யூதர்கள், நம்மைப் போலவே, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்று, மறைநூல் கூறுகிறது (வி.ப.19:5). அவர்கள் கடவுளையும், அவரது வார்த்தையையும் அசட்டை செய்தார்கள், அதனால் அழிந்து போனார்கள்.
அன்று ஏரோது அரசனின் அரண்மனையில் ஒருநாள், யூத குருக்கள், மறைநூல் வல்லுனர்கள், மறைநூல் அறிஞர்கள் கூடி, ‘இயேசு எங்கே பிறப்பார்’ என்று இறைவாக்கினரின் நூல்களிலிருந்து கண்டு பிடித்தார்கள். அது யூதேயாவிலுள்ள பெத்லகேம், என்று அறிந்து கொண்டார்கள். அங்கு விருந்தினராக வந்து அமர்ந்திருந்த மூன்று ஞானியரின் வாயிலாக, மெசியா பிறந்துவிட்டதையும் உறுதி செய்தனர்.
ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? மன்னன் ஏரோதின் ஆணைக்குக் காத்துக்கிடந்தார்களே தவிர, 4000 ஆண்டுகளாக எதிர்பார்த்த மெசியாவைப் பார்க்கவும் அவரை வழிபடவும் ஈடுபாடு காட்டவில்லை. இறைவார்த்தைகளை அசட்டை செய்தார்கள்.
இன்று நாம் அவர்களைப் போலல்லாமல், இயேசுவை அன்பு செய்து வழிபடுபவர்களாக இருந்தாலும், அவரது கட்டளைகளை அசட்டை செய்துதானே வாழ்கிறோம்! புற இனத்தாரைப் போலவே, ஒப்பனைக்கும், பகட்டுத்தனத்திற்கும் முதலிடம் கொடுத்துவிட்டு இறைவனின் நீதியையும் அவரது அரசையும் தேடாமல், புறக்கணித்து விடுகிறோம் அல்லவா? (மத். 6:33).
ஆகையால்தான், இருளிலிருந்து நம்மை, தமது மேலான ஒளிக்கு அழைத்தவரின் மேன்மை மிக்க செயல்களைப் பிறருக்கு அறிவிக்க வேண்டிய கடமையை, புனித பேதுரு நமக்கு நினைவூட்டுகின்றார் (பேதுரு 2:9). உலகிற்கு ஒளியாகவும் உப்பாகவும் வாழ அழைக்கப்பட்டவர்கள் நாம். அதன்படி அவரது வல்லமையான செயல்களை யாருக்காவது, எப்போதாவது அறிவித்ததுண்டா?
இதை நாம் எப்படி அறிவிப்பது என்று நமக்குள் கேள்வி எழக்கூடும்! உணவும் உடையுமின்றி வாழ்பவர்களுக்கு உதவும் போதும், நோயுற்றவர்களைச் சந்திக்கும் போதும், நாம் இயேசுவை அறிவிக்கிறோம். இயேசுவை அறியாதவர்களிடம், இயேசு பிறந்த காரணத்தைக் கூறி, அவர்தம் நன்மைகளை எடுத்துச் சொல்லும்போது, அவர்கள் உள்ளத்தில் இயேசு பிறந்து விடுகிறார். இதைத்தான் நாம் இன்று கொண்டாடும் ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’நினைவூட்டுகின்றது. இனியாவது, இதன்படி வாழ முயற்சி செய்வோம்; கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.