தோல்வியும் வெற்றிதான்!
Posted By ஆண்டோ சகாயராஜ் ச.ச.

மாலை நேரம். கிராமப்புற வாழ்க்கை அனுபவத்தின் ஒரு பகுதியாக வீடுகளைச் சந்திக்கச் சென்றிருந்தோம். மழை வரப்போவதை அங்குச் சூழ்ந்த கருமேகம் சுட்டிக்காட்டியது. “இதுதான் கடைசி வீடு, பேசிவிட்டு விரைந்து போகலாம்” என்றார் என்னோடு வந்த நண்பர்.
அந்த வீட்டருகில் வந்தபோது “வராதீங்க...போயிடுங்க” என்பது போல நாய் வலுவாகக் குரைத்தது. வாசலில் நின்றபோது அந்த வழியாக வந்த பெரியவர் எங்களோடு பேசினார்.“இந்த வீட்ல யாருமில்லைங்க... வீட்டைக் காலி செய்துட்டு போய்டாங்க...” “எதுக்கு?” என்ற கேள்வியை எங்கள் முகத்தில் பார்த்தவர் “இந்த வீட்டுல ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் பதினோராம் வகுப்பு படிக்கிற பையன் தற்கொலை செஞ்சிக்கிட்டான். பாவம்... அவனுடைய அப்பனும் ஆத்தாளும் இந்த ஊரவிட்டே போய்ட்டாங்க. அதுக்குமேல அவங்களைப் பத்தி என்ன ஏதுன்னு யாருக்கும் தெரியாது” என்று சொல்லி முடிப்பதற்குள் மழை தூரல் தொடங்கினது. எங்கள் மனது கனமானது. தயங்கிக் கொண்டே ஓடினோம். இந்தச் சிறுவயதில் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏன் ஏற்படுகின்றது? தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை, காதலில் தோல்வியுற்றதால் தற்கொலை, ஆசிரியர் திட்டியதால் தற்கொலை, வேலை கிடைக்காததால், பெற்றோர் அடித்ததால்... இப்படி, இன்றைய இளைய சமுதாயம், தற்கொலை செய்துகொள்ளப் பல புதிய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறது.

முன்னாள் மாணவர் சங்க விழாவில், ஒரு மாணவன் பேசினான், “நாம் படித்தபோது நமது பள்ளி ஆசிரியர்கள் அடித்த அடியை, மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருந்தால், அவர்கள் இன்னும் சிறையில் இருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படி அடித்துத் திருத்தாமல் விட்டிருந்தால்
நாம் இன்று சிறையில் இருந்திருப்போம்.” பெற்றோர், பெரியோர் குழந்தைகளைத் தக்க நேரத்தில் திருத்துவதும், வழிகாட்டுவதும் அவர்களது கடமை. அதை இளைய சமுதாயம் எப்படிப் புரிந்துகொள்கிறது? அப்படியே பெரியவர்கள் சினமடைந்தாலோ, குறைகளைச் சுட்டிக்காட்டினாலோ அதற்குத் தற்கொலைதான் தீர்வா?

தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்று மெய்ப்பித்த பலரில் இவரும் ஒருவர். அது நியூயார்க் தொடர்வண்டி நிலையம். கூட்டத்தின் இரைச்சல் நடுவில் கணவனும் மனைவியும் வேற்று கிரகவாசி போல அமைதியாக அமர்ந்திருந்தார்கள். “இனி என்ன செய்யலாம்? இதுவரை உழைத்ததை எல்லாம் திருடிவிட்டார்கள். பெயர், பணம், புகழ், தகுதி எல்லாம் போச்சி...” என்று அவர்களது கலங்கிய கண்ணீர் அமைதியாகப் பேசியது.

இவர்கள் தயாரித்த முயல் கதாபாத்திரம் கொண்ட அனிமேஷன் படங்களை அவரது எதிரிகள் சூழ்ச்சி செய்து சட்டப்பூர்வமாகப் பறித்துக்கொண்டார்கள். அவர்களோடு வேலை செய்தவர்களும் பணத்திற்காக எதிரியோடு சேர்ந்துவிட்டார்கள். அவர்கள் கண்முன் இரண்டு வழிகள் தெரிந்தன. ஒன்று, ஓடும் தொடர்வண்டியின் முன் பாய்ந்து அங்கேயே தற்கொலை செய்துகொள்ளலாம். இரண்டு, திரும்பவும் முதலிலிருந்து கடை நிலை ஊழியனாக உழைக்க வேண்டும். அருகிலிருந்த மனைவி நம்பிக்கையோடு அவர் கைகளைப் பற்ற, “ஒரு கை பார்ப்போம்”என்று தற்கொலை எண்ணத்தைக் கொன்று புதிய தெம்போடு புறப்படுகிறார்கள்.

தங்களது கற்பனைத் திறனைக் கொண்டு முயலுக்கு மாற்றாகி இந்த முறை எலியைக் கற்பனையில் ஓடவிட்டு அதற்குச் சட்டை, பேண்ட் போட்டு, டை கட்டி, அதன் தலையைப் பெரிதாக்கி உடலை சிறிதாக்கி இவர்கள் செய்த உருவாக்கம்தான் ‘மிக்கி ம ௌஸ்’அனிமேஷன் படம். உலகம் முழுக்க நல்ல வரவேற்பு, முக்கியமாகக் குழந்தைகளிடமிருந்து கிடைத்தது. பிறரால் தமக்கு வந்த தோல்வியைத் தமது நம்பிக்கையினால் இரண்டாம் முறை துரத்தியவர்தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘வால்ட் டிஸ்னி’என்ற நிறுவனத்தின் சொந்தக்காரர் திரு. வால்ட். வாழ்க்கையில் தோல்வி, இரண்டகம், ஏமாற்றம், துன்பம் எனப் பல இன்னல்கள் வந்து போவதுவாடிக்கை. ‘அவ்வளவுதான் முடிந்துவிட்டது’என்று பயந்து, அலறி, தற்கொலைக்கு ஓடியிருந்தால் ஒவ்வொரு அருஞ்செயலாளனும் ஓராயிரம் முறை இறந்திருக்க வேண்டும். பல ஆண்டுகள் உழைத்துக் கண்டுபிடித்து எழுதி வைத்த அறிவியல் நுணுக்கங்கள், எதிர்பாராத தீ விபத்தில் சாம்பலானபோது, இவரும் மனமுடைந்து இறந்து போயிருந்தால் ஐசக் நியூட்டனைப் பற்றியும் அவரது கண்டுபிடிப்புப் பற்றியும் உலகம் அறியாமல் போயிருக்கும்.

‘மனிதனால் பறக்க முடியும்’ என்று மெய்ப்பிக்க, ஊர் முழுக்கக் கடன் வாங்கி, ஒரு குட்டி வானூர்தியைக் கண்டுபிடித்த போது அமெரிக்க அரசாங்கமே ரைட் சகோதரர்களை எதிர்த்தது. அந்நேரம் ஊர்ப்பட்ட கடனையும் பயமுறுத்தும்அ ரசாங்கத்தையும் நினைத்து தற்கொலை செய்திருந்தால்? உலகப் போக்குவரத்துக் கடலோடு நின்றுபோயிருக்கும். பகல் முழுவதும் இலண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து, இரவு முழுவதும் அதை எழுதுவார் இவர். கடைசிவரை வறுமையில் வாழ்ந்தாலும் மனம் தளர்ந்து சாக நினைக்கவில்லை. சாதித்தார் காரல் மார்க்ஸ், ‘மூலதனம்’ என்ற நூல் வடிவில்.

இவர் இராணுவப் பயிற்சி கல்லூரியில் சேர நினைத்தபோது, ஒரே தேர்வை நான்கு முறை எழுதிய பிறகே தேர்ச்சி பெற்றார். மூன்று முறையும் ஒரே தேர்வில் தோல்வியா...? எனத் துவண்டு போய், வருத்தத்தில் மாண்டிருந்தால்பிரிட்டிஷ் மக்களுக்கு வின்சென்ட் சர்ச்சில் என்ற, இரண்டாம் உலகப் போரை வென்ற பிரிட்டிஷ் தலைமையமைச்சர் கிடைத்திருக்க மாட்டார். கொடுமையான சூறைக் காற்றுச் சுழன்று தாக்கினாலும், தொடர்ந்து பயணம் செய்து இந்திய துணைக்கண்டத்திற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோட காமா. பயணத்தை முடித்ததும் ‘நீங்களும் நம்பிக்கையோடு போராடி வாழுங்கள்’என்பதுபோல ஆப்பிரிக்கக் கண்டத்தின் முனையை அடைந்தபோது, ‘நன்நம்பிக்கை முனை’என்று பெயரிட்டார்.

இப்படி உலகில் உள்ள எந்த ஓர் அருஞ்செயலாளரின் வரலாற்றைத் தூசி தட்டிப் படித்துப் பார்த்தாலும் அவர்கள் சொல்லுவது இதுதான், “தம்பி, தங்கைகளே! வாழ்க்கையில் தொடர்ந்து போராடுங்கள்; தற்கொலை எந்தச்சிக்கலுக்கும் தீர்வாகாது.” மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ளவேண்டியது இரண்டு. விரும்பியது கிடைக்காதபோது முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். இறுதியில் கிடைக்காது என்று தெரிந்ததும் உடனே கிடைத்ததை விரும்புவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். திருமணமானவர்களுக்குத் தெரியும் இது எவ்வளவு பெரிய உண்மை என்று. “கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைத் திறப்பார்” என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நம்மில் சிலர் மூடின கதவையே முறைத்துப்
பார்த்துக்கொண்டிருந்தால்... யாருடைய தவறு? தொடர்ந்து தேட வேண்டும்.

தற்கொலை எண்ணத்தை முதலில் கொல்ல வேண்டும். ஏனெனில் இந்த உலகில் யாரும் தோற்பதற்கு வாய்ப்பில்லை. ‘நான் தோற்றேன்’ என்று ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே தோற்கிறார்கள். தோல்விகளுக்குத் தற்கொலைதான் முடிவு என்றால் உலகில் வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஏனெனில் அனைவரும் ஏதோ ஒன்றில் தோற்றவர்கள்தான்.
பல நேரங்களில் தோல்வியும் வெற்றிதான், அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டால்...

All Features

    Author

    Contact person

    ஆண்டோ சகாயராஜ் ச.ச.

    Events