நட்பு சிறந்தால் நாளும் சிறப்பே
Posted By ஆ.தைரியம் சே.ச

“தமிழர் திருநாள்… ‘நாம் தமிழர்’ ஐக்கிய இராச்சியம் தங்களை அன்போடு அழைக்கிறது... மண் வாசனையோடு நம் கிராமங்களின் ப ொங்கல் இலண்டன் மாநகரில்… ஸ்கைப் வழியில் அண்ணன் சீமான்…” என்ற காணொளி அழைப்பினை இணையத்தில் கண்டு இதயத்தில் மகிழ்ந்தேன்.

அந்நிய மண்ணில் அடியெடுத்து வைத்த பிறகு, அது ஏனோ எனக்குள்ளே இனம்புரியா தமிழ் உணர்வும், தாய்மண் பற்றும் அதிகரித்திருந்த அந்தத் தருணத்தில் இந்த அழைப்பு எனக்கு மகிழ்வினைத் தந்தது.

மண்வாசனையோடு கிராமத்துப் பாணியிலே ப ொங்கல் வைத்து நம்மவர் மகிழும் அந்த மகிழ்விலே பங்கெடுக்க வேண்டும் என ஆசித்தேன். இன்னொரு புறம், அங்கே உரையாற்றவிருக்கும் அண்ணன் சீமான் அவர்களின் உரையினைக் கேட்க வேண்டும் என்ற ஆவல். அரசியலைப் பற்றிப் பேசுவதே தவறு என்று ஒதுங்கியே இருந்த எனக்குள் அரசியலைப் பற்றிய ஆர்வத்தையும், அரசியலைப் பற்றிய ஒரு மாற்றுப் பார்வையையும் இவரின் பேச்சுக்கள் வழங்கியுள்ளன என்பேன். இவரின் உணர்வுப்பூர்வமான ஆங்கிலம் கலவாத தமிழும், இயற்கை மீதான அக்கறையும், இளையோர் மீதான பாசமும், இனம் காக்க வேண்டும் என்ற வேகமும் என்னை அதிகம் கவர்ந்துள்ளன.

இலண்டன் மாநகரில் நம் தமிழ் மக்கள் சாதியைக் கடந்து, மதத்தைக் கடந்து, தமிழர்களாய் இணைந்து நின்று கொண்டாடும் ப ொங்கல் விழாவில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்ற கனவோடு காத்திருந்தேன்.

“நண்பா… நம்ம தமிழ் மக்கள் ப ொங்கல் விழாக் கொண்டாடுறாங்களாமே... போயிட்டு வருவோமா?” என்று என் தோழர் ஜெனிமன் அவர்களிடம் கேட்க, எப்போதும் போல், “நிச்சயமா போயிட்டு வருவோம்” என உடனே ஒப்புக்கொண்டார். இலண்டன் வந்த சில மாதங்களில் எனக்குக் கிடைத்த ஓர் அரிய நட்பு, தோழர் ஜெனி. இலங்கையில் பிறந்த தமிழ் உறவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் சென்னையில் வளர்ந்தமையால் அவர் பேச்சிலே சென்னைத் தமிழ் வளர்ந்திருந்தது. உதவி என்று கேட்டாலே ஒதுங்கிடும் உறவுகள் மத்தியிலே, எனக்கு உதவிட ஆசிக்கும் ஓரு நல்ல உறவு ஜெனி. உரிமையோடு உதவி கேட்கும் அளவுக்கு ஒரு நல்ல நட்பு. அந்நிய மண்ணைப் பற்றி அதிகம் அறியாது இருந்த என் தொடக்கக் காலங்களில் ஆறுதலாய் இருந்த ஓர் அருமையான மனிதர்.

“நிச்சயம் போயிட்டு வருவோம். என்ன தேதி, எந்த இடத்தில் நடக்குதுன்னு பார்த்துச் சொல்லுங்க” என்று கூறினார். நானும் இணையத்தில் தேடிக் கண்டறிந்து அவரிடம் தகவலைச் சொன்னேன். “ஒண்ணும் சிரமம் இல்லை. கவலையேபடாதீங்க, போய்ப் ப ொங்கல் சாப்பிட்டு வந்துருவோம்” என்றார். அவரின் நல்மனதை எண்ணி அவரின் நட்பிற்காய் இறைவனுக்கு நன்றி நவின்று மகிழ்ந்தேன்.

அன்று 2016ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி, தை மாதம் 2ஆம் நாள். காத்திருந்த அந்நாள் வரவே, என் தோழர் ஜெனி அவர்களை அழைத்து, “நண்பா…நான் உங்களை எந்த இரயில் நிலையத்தில் சந்திக்க? ரெண்டு பேரும் சேர்ந்தே ‘பேன்ஸ்டட்’ போயிடலாம். நான் இதுவரை அங்க போனதே இல்ல…” எனச் சொல்ல, “எனக்கும் தெரியாது வாங்க இருவரும் சேர்ந்து கண்டுபிடிப்போம். கூகுள் இருக்கப் பயமேன்…” என்று தைரியமாய்ச் சொன்னவர். “ நாளைக்கு ரொம்ப குளிராய் இருக்கும். அதுனால கவனமா வாங்க…” என்றார். ஓரளவுக்கு இலண்டன் குளிரை அனுபவித்த நான், “நிச்சயமா… நண்பா, அதெல்லாம் சரியா வந்திடுவேன்” என்றேன்.

செல்லும் வழியிலே இரயிலில் பல தமிழ் உறவுகளைக் கண்டேன். இந்த அந்நிய கலாச்சாரத்தின் தாக்கத்தால் அவர்களிடம் பேச ஆசையிருந்தும் பேசாமல் தானுண்டு தன் வேலை உண்டு எனப் பார்த்தும் பார்க்காதது போல் பயணித்தேன். அவ்வப்போது நம் தமிழ்ப் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்த நம்மவரைக் காணும் போதெல்லாம், “இந்தக் குளிரிலும் நம் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்க நம் கலாச்சார உடைகளை அணிந்து பயணிக்கிறார்களே” என்று எண்ணி மகிழ்ந்தேன். நான் சேர வேண்டிய இடத்தைச் சற்றுத் தாமதமாக அடைந்ததும் அங்கும் இங்கும் அலைந்து, அலைபேசி வழியாக என் தோழரை அழைத்துச் சந்தித்தேன்.

“என்னாச்சு தோழா… ரொம்ப அலைய விட்டுட்டேனா?” என்றார். “ச்சே… ச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நீங்கதான் எனக்காக அலையிறீங்க…” என்றேன். “வாங்க நம்ம இன்னும் கொஞ்சம் தூரம் பஸ்ல போகணும். சரியான நேரத்துக்குப் போயிடலாம்னு நெனக்கிறேன்” என்று சொன்னார். நாங்கள் ஒரு வழியாய் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தோம். “எனக்குள்ளே ஓர் ஐயம், சரியான வழியில போறோமா… இல்ல… வழி மாறிப்போறோமானு தெரியலயே…” என யோசித்தேன். என் எண்ணங்களை அறிந்த தோழர் ஜெனி, “என்ன தோழா, என்ன யோசிக்கிறீங்க. கவலைப்படாதீங்க சரியான வழியில்தான் போறோம்” என்றார்.

என் தோழர் சொன்னபடியே மூன்று அடுக்குக் குளிர் ஆடை அணிந்தும் கூட குளிர் கொடூரமாய் இருந்தது. ப ொங்கல் விழா நடக்கும் இடத்தை மாலை வேளையில் அடைந்த நாங்கள் அங்கிருந்த தோரணங்களையும், ப ொங்கல் பானைகளையும், ஜல்லிக்கட்டு எருதுகளையும் சுமந்த பதாகைகளையும் கண்டு பிரமித்துப் போனோம்.

“என்ன தோழா, உங்க ஊர்ல இருக்கிற உணர்வு இருக்கா?” என்று அவர் கேட்க, “ரொம்ப சிறப்பா இருக்கே தோழா. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே உள்ளே இன்னும் சிறப்பா இருக்கும். கண்டிப்பா நம்ம மக்கள் பலரைப் பார்க்கலாம்…” என்று சொன்னவாறே சென்றோம்.

விழா நடந்த பெரிய அரங்கத்திற்கு அருகிலே கரும்புகளைக் கட்டி அதன் நடுவிலே வரிசையாக பல பானைகளில் ப ொங்கல் வைத்திருந்த தடயத்தை அங்கிருந்த அடுப்புகளைக் கண்டு அறிந்தேன். “என்ன நண்பா… வாகனங்களையெல்லாம் ஒண்ணும் காணோமே… இங்கதான் நடக்குதா?” என்று கேட்டேன். “வாங்க நண்பா அரங்கத்துக்குள்ள போய் பார்ப்போம்” என்றார். அரங்கத்தை அடைந்த எமக்கு அங்கே மிகப் பெரும் ஏமாற்றம். அரங்கத்தில் ஒரு சிலர் அவர்கள் அமைத்திருந்த ஒலிபெருக்கிகள், மின்விளக்குகள், நாற்காலிகள், இருக்கைகள் என அனைத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டிருந்தனர்.

“அடடா… ஆசையா வந்தோம். இங்க எல்லாம் முடிந்து எல்லாரும் கெளம்பிட்டாங்காளே… ச்சே…” என்று எண்ணி அரங்கத்தில் இருந்த ஒருவரிட“அண்ணா… இங்க ப ொங்கல் விழா இருக்குனு சொன்னாங்களே…” என மெல்லிய குரலில் கேட்க, அவர் “நீங்கள் எவ்விடத்த இருந்து வாறீங்கள்? ஒரே குளிரா இருக்கு. ஹீட்டர் ஓன்ல இல்ல. எல்லாருக்கும் சரியான குளிர். அதால கெதியா வெளிக்கிட்டினம். சோரி உங்களுக்குக் கொடுக்க எங்கிட்ட ப ொங்கல் இல்லை… இதிலே கொஞ்சம் சோறு இருக்கு, கொண்டு போங்கோ?” என்று இலங்கைத் தமிழ் வாசம் கலந்து அவர் சொன்ன வார்த்தைகளிலே தமிழ் உறவுகளுக்கே உரிய விருந்தோம்பலின் சிறப்பை உணர்ந்தேன்.

“தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும், தமிழ் உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்தவை நடக்கவில்லை” என்று வருந்துகையில் என் நண்பரின் நட்பின் மேன்மையை எண்ணி மகிழ்ந்தேன். நட்பிற்காக நாள் முழுதும் அலைந்து, அன்று மட்டுமன்றி என்றுமே தேவையென்று சொல்கையில், தேடிவந்து உதவிடும் அவரின் உயரிய மன எண்ணி மகிழ்ந்தவாறு வீடு திரும்புகையில் என் எண்ணமெல்லாம் என் நண்பரைப் பற்றியும் அவரின் நட்பைப் பற்றியுமே மேலோங்கியிருந்தது. நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிதான உலகில் நல்ல நட்புகள் நிலைப்பது உயரிய வரமே என உள்மனதில் உணர்ந்தேன்.

உணர்வோடு உடன் பயணித்து உளமார உரையாடி மகிழ்ந்த என் தோழரின் நட்பினை எண்ணி மகிழ்கையில் எனக்குள்ளே எழுந்த எண்ணமெல்லாம் நட்பு சிறந்தால்… நாளும் சிறப்பே… என்பதே. அன்றாட வாழ்வில் நல்ல நட்புகளை வளர்ப்பதும் அந்த நல்ல நட்புகளில் நிலைப்பதும் மனிதம் வளர்க்கும் மகத்தான செயலே என்பதை உணர்ந்தேன். நட்பு சிறந்தால்… நாளும் சிறப்பே… என்பதை அன்றாடம் உணர்ந்து வாழும் போது நம்மைப் பார்த்து அனைவரும் சொல்வர் நட்பிலே சிறந்து நாளும் சிறந்திடும் “இதுவன்றோ மனிதம்” என்று. நல்ல நட்பிலே நிலைப்போம்; நாளும் பாரிலே சிறப்போம். நட்பின் மேன்மையை நாளும் உணர்த்திடும் நல்லதோர் மனிதம் வளர்ப்போம்.

All Features

    Author

    Contact person

    ஆ.தைரியம் சே.ச

    Events