மரணம் முடிவன்று நித்திய வாழ்வின் தொடக்கமே!
Posted By அந்தோணி சாமி

தெய்வ பயத்துடன் வாழ்ந்த கிறிஸ்துவர் ஒருவர் திடீரென்று ஒருநாள் மரித்துப்போனார். பரலோக வாசலை அவரது ஆன்மா நெருங்கியபோது, அது பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டு “என்ன செய்வது? யாரைக் கேட்பது?” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த பேதுரு, “ஏன் தயங்குகிறாய்? இரகசிய வார்த்தையைச் சொன்னால் போதுமே, கதவு தானாகவே திறந்துவிடுமே, இது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்குக் கிறிஸ்துவர், “இரகசிய வார்த்தையா? அதுபற்றி நான் கேள்விப்பட்டதேயில்லையே!” என்றார்.

“அப்படியானால் நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லி 50 மார்க்குகளைப் பெற்றால் போதும், நீங்கள் உள்ளே வந்துவிடலாம்!” என்றார் பேதுரு. இங்கேயும் “டெஸ்டா? சரி கேளுங்கள்!” என்றார் கிறிஸ்துவர் சிறிது தயக்கத்துடன். “விண்ணுலகிற்கு வர உமக்கு என்ன தகுதியுள்ளது?” “நான் பரம்பரைக் கிறிஸ்துவன், எல்லா அருட்சாதனங்களையும் பெற்றிருக்கிறேன்!” “நல்லது, இதற்கு உமக்கு 10 மார்க்குகள் உண்டு.
இன்னும் என்ன தகுதியுண்டு?” “தவறாமல் கோவிலுக்குச் சென்று ஜெபிக்கிறேன். ஓரளவு தர்மமும் செய்கிறேன்!” “நல்லதுதான், இதற்கு 10 மார்க்குள் தருகிறேன்!” “பத்துக் கற்பனைக்கு எதிராகப் பாவம் செய்ததேயில்லை!” “இதற்கும் 10 மார்க்குகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கூட்டிப் பார்த்தாலும், 30 மார்க்குகள் மட்டும்தான் வருகிறது. நீங்கள் ‘பாஸாக’வில்லை. ஆகையால் உள்ளே வரமுடியாது!” என்றார் பேதுரு.

பதறிப்போன கிறிஸ்துவர், “உலகில் நான் வாழ்ந்தபோது இறைவனின் இரக்கத்தை நம்பியே வாழ்ந்தேன். இப்போதும், அவரது, இரக்கத்தை நம்பியே நிற்கிறேன்!” என்றார். இதைச் சொன்னவுடனேயே விண்ணகக் கதவு திறந்து கொண்டது! “இறைவனின் இரக்கமென்று இப்போது சொன்னாயே, இதுதாம்பா அந்த இரகசிய வார்த்தை. நல்ல கள்ளன் கூட இதைத் தெரிந்து வைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டான். உனக்கு இது தெரியாமல் போனதெப்படி?” என்று பேதுரு கேட்டதாகக் கூறுவார்கள்.

இது ஒரு கற்பனை நிகழ்ச்சியானாலும், இதில் பல உண்மைகள் இருப்பதை நாம் காண முடியும். “நம்மில் பலர், கல்வாரியில் நமதாண்டவர், நம் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி மீட்டுவிட்டார்; நாம் செய்யும் பாவங்களுக்குப் பாவ அறிக்கை செய்தாலே போதுமானதென்று, பிரிவினை சபையாரைப் போலத் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். தலையான பாவங்கள் எதுவும் நாம் செய்யவில்லையெனக் கவலையின்றியும் இருந்து விடுகிறோம். ஆனால்நம்மையறியாமலே, தலையான பாவங்களுக்கு இணையான பாவங்களை, துணிகரமாகச் செய்துக் கொண்டிருப்பதை அறியாமலிருக்கிறோம்.”

உதாரணமாக, “ஒருவன் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தாலே, அவன் விபச்சாரம் செய்தாயிற்று” என்று மத். 5:27லும், “கலகம் விளைவிப்பது பில்லி சூனியத்திற்கு இணையென்றும், கீழ்ப்படியாத முரட்டாட்டம், சிலை வழிபாட்டுப் பாவத்திற்கு இணையென்றும்,” 1 சாமு. 15:22லும் எழுதப்பட்டுள்ளது!” “வாசலில் கிடந்த ஏழை லாசரை அசட்டை செய்த செல்வந்தன், பாதாளத்திற்குத் தள்ளப்பட்ட உவமை”யை நமதாண்டவரே நமக்குக் கூறியிருக்கிறார் (லூக். 16:91). மேலும் “பாவத்திற்குத் தண்டனை நரகம் என்றும் அங்கே ஆன்மாக்களைத் தின்னும் புழுக்கள் சாகாது, நெருப்பும் அவியாது”, என்றும் மார்க் 9:48இல் கூறியதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதைப்பற்றி யாரும் அதிகமாகப் போதிப்பதுமில்லை. நாமும், அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதுமில்லை. ‘கிறிஸ்துமஸ்’ நமக்குச் சொல்லும் செய்தி என்ன? “அமெரிக்க இராணுவத்தில் உயர்ந்த பதவியிலமர்ந்து பணியாற்றி வந்த தம் ஒரே மகன் சாமுவேல், தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டான்” என்ற செய்தியைக் கேட்டவுடன், அந்தப் பணக்காரத் தந்தை செயலிழந்து போனார். மனமுடைந்த நிலையில், அவர் தம் சொத்துக்களையும், தாம் பாதுகாத்து வந்த ஏராளமான கலைநயமிக்க ப ொருட்களையும், ஏழைகளுக்குக் கொடுத்துவிடத் தீர்மானம் செய்து, எல்லாவற்றையும் ஏலக்கடைக்காரரிடம் ஒப்படைத்தார்.

ஏலம் தொடங்கிய நேரத்தில் அங்கு வந்த பெண் ஒருத்தி, தம்மைச் ‘சான்ரா’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் மரித்த சாமுவேலின் தோழியென்றும், அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலியென்றும் கூறி, தம் சோகத்தை வெளிப்படுத்தினார். ஏலம் ஆரம்பமானது. முதலில் மரித்த சாமுவேலின் புகைப்படம் ஏலத்திற்கு வந்தது! இதற்குச் சந்தை மதிப்பு எதுவுமே இல்லாத காரணத்தால், யாருமே ஏலம் கேட்க முன்வரவில்லை.
மாறாகச் சிலர், இது ‘ஜூலியஸ் சீசர்’ படம் என்று கேலியும், கிண்டலுமாகப் பேசினார்கள். அப்போது சான்ரா ஓடிவந்து, “இதை நான் வாங்கிக்கொள்கிறேன்!” என்றார். படத்தை வேறு யாருமே ஏலம் கேட்காத நிலையில், படம் ரூ.1000க்கு ஏலம் போனதாகக் கூறி, அவளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதோடு, ஏலம் முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது! அதைக் கேட்டவுடன் “இது என்ன ஏமாற்று வேலை?” என்று பலரும் கத்தினார்கள். காரணம் கேட்டு, சிலர் கலகத்திலும் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள்: “எழுதப்பட்ட உயிலின்படியும், உரிமையாளரின், விருப்பப்படியும், யார், மகன் சாமுவேலின் படத்தை விரும்பி வாங்கிக் கொள்கிறார்களோ, அவர்களே மற்ற எல்லாச் சொத்துக்களுக்கும் உரிமையாளராகி விடுகின்றனர். படத்தைச் சான்ரா, வாங்கிக் கொண்ட காரணத்தால், எல்லாப் ப ொருட்களும், சொத்துக்களும் அவருக்கே உரிமையாகிவிட்டன. அதன் காரணமாகத்தான், மேலும் எங்களால் ஏலம் விட முடியவில்லை” என்று கூறினார்களாம்.

ஆனால் நீங்களும், நானும் சான்ராவைவிட அதிர்ஷ்டசாலிகள், பாக்கியம் பெற்றவர்கள், எப்படித் தெரியுமா? நம் தந்தையாம் கடவுளின் விருப்பப்படி, யார், யார் தம் மகன் இயேசுவை அன்புகூர்ந்து, விசுவசிக்கிறார்களோ, அவர்கள் அத்துணைப்பேரும் கடவுளுடைய பிள்ளைகளாகும்படி உரிமை தந்திருக்கிறாரல்லவா? (யோவான் 1:12).

“இறைமகனான இயேசு. எவரும் காணக்கூடாத கடவுளின் உண்மையான சாயல்” என்று 1 கொலோ. 1:15 இல் படிக்கிறோமல்லவா, அந்தச் சாயலை, வடிவத்தை, நாம் ஏலக்கடையில் அல்ல, நாம் பெற்ற ஞானஸ்நானத்தின் வழியாக, நம் உள்ளத்தில் பெற்றுவிட்டோம். இதன் வழியாக நாம் விண்ணக மகிமையையும், வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும், பரிசாகப் பெற்றிருக்கிறோம்.

இந்த மகிழ்ச்சியைத்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவிலும் கொண்டாடி வருகிறோம். 1917ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் போர்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் மூன்று குழந்தைகளுக்குக் காட்சி தந்த மரியன்னை, நரகத்தின் கொடுமையையும், அதில் விழும் எண்ணற்ற பாவிகளையும், அவர்கள் படும் துன்பங்களையும் அவர்களுக்குக் காட்டி, பாவிகள் மனம் திரும்பும்படி, அவர்களுக்காக ஜெபம் தபம், தர்மம் செய்யும்படி கேட்டதையும் நாமறிவோம். மரித்த சில, புனிதர்கள், பரலோகத்தைப் பற்றியும், உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும், தங்களின் நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கு விவரித்துக் கூறியிருக்கின்றனர். பலர் மரித்த பின்பு, மீண்டும் உயிர்பெற்று வந்து, இதைப் பற்றி பேசி எச்சரித்திருக்கின்றனர் (மத். 27:52-53). 693 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த திரிதெம் என்ற செல்வந்தர் திடீரென்று மரித்துப்போனார். அவரை அடக்கம் செய்ய முற்பட்டபோது, அவருக்கு மீண்டும் உயிர் வந்துவிட்டதாம்!

மரித்துப்போனவர் எழுந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து மனைவியும், பிள்ளைகளும் அஞ்சி ஓடிவிட்டார்களாம். ஆனால், அவர் எழுந்து நேராக ஆலயத்திற்குச் சென்று பல மணிநேரம் அமர்ந்து ஜெபித்துவிட்டு, வீட்டுக்கு வந்து, தம் சொத்துக்கள் அனைத்தையும், மனைவி, மக்கள், மற்றும் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, துறவியாக வாழப் புறப்பட்டாராம். இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து நாட்டு மன்னன், மரித்து உயிர்த்தவரை நேரில் பார்த்து, அவருக்கு என்ன நடந்தது? என்னென்ன அவர் கண்டார் என்று அறிந்துகொள்ள அவரை வரவழைத்தாராம். கூடவே மறைமாவட்ட ஆயரையும், பங்குத் தந்தை எம்ஜில் என்பவரையும் அழைத்து வந்தனர். திரிதெம் தாம் இறந்தவுடன் கண்ட காட்சிகளையும் அவர்களுக்கு விவரித்தாராம்.

இறந்தவுடன், ஒளி வீசும் ஆடைகளை அணிந்திருந்த, அழகிய தோற்றம் கொண்ட ஒரு இளைஞரின் முன் நிற்பதாக உணர்ந்தாராம். அவரது ஆணையின்படி, ஒரு தூதன் அவரைப் பெரிய பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றாராம். அங்கே, ஒரு பகுதியில் பெரும் நெருப்பும், மறு பகுதியில் பயங்கர பனிப்பொழிவும் பனிப்பாறையுமாக இருந்ததாம். பல ஆன்மாக்கள் நெருப்பின் வெப்பத்தைத் தாளமுடியாமல், பனிப்பாறையை நோக்கி ஓடிவருவதும், பனியின் கொடுமைத் தாளமுடியாமல், மீண்டும் வெப்பத்தை நோக்கி ஓடுவதுமாக இருந்தனராம்.

அவர்களின் நிலை பரிதாபமாக இருந்ததாம். “மரிக்கும் தருவாயில், மீட்புப் பெற்றவர்கள் இவர்கள்! உலகில் தாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, தூய்மை பெறும் வரையில் இங்கே இருப்பார்கள்! பூமியில் இவர்களுக்காகச் செய்யப்படும் ஜெபம், திருப்பலி, தர்மம், இவர்களின துன்ப நாட்களைக் குறைத்துவிடும். முழுமையாகத் தூய்மை பெற்றவுடன் இவர்கள் விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்!” என வான தூதர் கூறினாராம். இருதியாக, அவர் கண்ட காட்சி நரகமாம்! பிரமாண்டமான கிணறு வடிவம் ஒன்று, எரிமலையைப் போல நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்ததாம். தொட்டிகளில் குப்பையைக் கொட்டுவதைப்போல, எண்ண முடியாத ஆன்மாக்கள், கொத்துக் கொத்தாக, துறவிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள், ஆண்கள், பெண்கள் என அதனுள் விழுந்து கொண்டிருந்தனராம். இப்படிச் சொன்ன எல்லா விபரங்களையும், பங்குத் தந்தை எம்ஜில் குறிப்பெடுத்து அப்போது வாழ்ந்த புனிதர் பீட் என்பவரிடம் பகிர்ந்து கொண்டாராம். அவரும் தாம் எழுதிய “ஆங்கில நாட்டுத் திருச்சபை வரலாறு” என்ற நூலில் இவைகளையெல்லாம் எழுதி வெளியிட்டாராம். துறவியாக வாழ்ந்த செல்வந்தர் திரிதெம் புனிதராக வாழ்ந்து புனிதராக மரித்த காரணத்தால், அவருக்குத் திருச்சபை புனிதர் பட்டம் தந்து, செப்டம்பர் முதல் நாளன்று அவருக்கு விழா எடுத்துச் சிறப்பிக்கிறது.

இப்படியாக மரணத்திற்குப் பின்பு என்ன நடக்குமென்பது இறைவார்த்தையின் வழியாகவும் மரியன்னை தந்த காட்சிகளில் சொல்லப்பட்ட விபரங்கள் வழியாகவும், மரித்த புனிதர்களின் சாட்சிகள் மூலமும் உலகில் வாழும் நமக்கு அறிவிக்கப்படுகிறது.

இவையனைத்தையும் அறிந்த பின்பும், “இறைவார்த்தைக்கும், திருச்சபைக்கும் செவிசாய்க்காதவர்கள், இறந்த ஒருவன் எழுந்து வந்து கூறினாலும் நம்பப் போவதில்லை!” என்று நமதாண்டவர் கூறியதுபோல (லூக். 16:27) நாமும் இறந்துவிடப் போகிறோமா? அல்லது, திருந்தி வாழப் போகிறோமா? முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.

All Features

    Author

    Contact person

    அந்தோணி சாமி

    Events