வெந்து சாக வேண்டியது கந்துவட்டிக் கும்பலா? நொந்து போன ஏழையா?
‘கந்துவட்டிக்காரர்களின் கொண்டாட்டப் பூமிதான் தமிழ்நாடா?’ இப்படிச் சிந்திக்கும் அளவுக்கு நம் நாட்டில் கந்துவட்டிக்காரர்களின் அடாவடிக் கொடூரம் அரங்கேறி வருகிறது. 2017, அக்டோபர் 23, திங்களன்று வழக்கம் போல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரின் அலுவலகம் முன்பு குறை கேட்கும் நாளுக்கான மனுக்களைச் சமர்ப்பிக்கப் பொதுமக்கள் கூடி வந்தனர். அப்போது எசக்கி முத்து (28) – சுப்புலட்சுமி (24) என்கிற ஏழை இளம் தம்பதியர் சரண்யா (5), அட்ஷய பரணிகா (2) என்கிற இரு பெண் குழந்தைகளுடன் தீக்குளித்துக் கரிக்கட்டையாகிப் போயினர்.
என்னதான் பிரச்சனை?
தம் குடும்பச் செலவுக்காக இந்த ஏழைகள் வாங்கிய கடன் தொகை ரூ. 1,45,000. இவர்கள் கட்டிய வட்டி மட்டுமே ரூ. 2,34,000. இதற்கு மேலும், அசல் எங்கே என்று கடன் கொடுத்த கந்துவட்டிக் காரர்களும், அவர்களுக்குத் துணையாக உள்ளுர்க் காவல்துறையினரும் இக்குடும்பத்தை விரட்டினர்; மிரட்டினர். காவல் துறை மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தும் பயனில்லை. ஆட்சியாளரிடம் 6 முறை முறையீடு செய்தும் பயனில்லை. இறுதியில் வாழ்க்கையின் விளிம்புக்கே தள்ளப்பட்டு நிம்மதி பறிக்கப்பட்ட இந்த இளம் தம்பதியர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தாங்கள் பெற்று வளர்த்த பிஞ்சுக் குழந்தைகளைத் தீக்கு இறையாக்கினர்; தம்மைத் தாமே சாம்பலாக்கிக் கொண்டனர்.
கடமை தவறிய ஆட்சி:
இவர்கள் முறையீடு குறித்து காவல்துறையினர் என்ன செய்திருக்க வேண்டும்? அதிக வட்டி வசூலிப்பதைத் தடுத்து, மிரட்டுவோரையும் துன்புறுத்துவோரையும் கூப்பிட்டு 1957ஆம் ஆண்டின் கந்துவட்டித் தடைச் சட்டப்படி தண்டித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் கந்துவட்டித் தடுப்புச் சட்டம் 2003ஐச் சுட்டிக்காட்டி, கந்துவட்டிக் கொடூரன்களைக் கோர்ட்டில் நிறுத்தி 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராதத்துடன் தண்டனையையும் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கந்துவட்டிக் கொடுமையாளர்களுடன் சேர்ந்துகொண்டு காவல் துறை இந்த ஏழைக் குடும்பத்தாரை மிரட்டியிருக்கும் தொலைபேசி உரையாடல்களை ‘நக்கீரன்’ போன்ற இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன.
கந்துவட்டிக் கொடுமைகளைக் கேள்விப்பட்ட சென்னை உயர்நீதி மன்றம் தாமாகவே முன்வந்து 2013, செப்டம்பர் 23இல் அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. கந்துவட்டிக் குண்டர்கள் காவல்துறையை விலைக்கு வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களை மிரட்டி அடிபணிய வைப்பதைத் தடுக்க, மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களை ஏற்படுத்த வேண்டுமென ஆணையிட்டது. 2003இலிருந்து இன்றுவரை நடந்த கந்துவட்டிக் கொடுமைகளைப் பட்டியலிட்டு எடுத்த நடவடிக்கைகள், கிடப்பில் போட்ட வழக்குகள் எனக் கணக்குக் காட்டச் சொல்லி ஆணையிட்டது. யாரை நோக்கி இந்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன? தமிழக அரசின் உள்துறை செயலருக்கும், தமிழகக் காவல் துறையின் தலைமை அதிகாரிக்கும்தான்.
எங்கே போயின இந்த உயர்நீதி மன்ற ஆணைகள்? சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டும் ஆட்சித்துறை என்னதான் செய்தது? கடந்த 14 ஆண்டுகளில் கந்துவட்டிக்காக உயிர்ப்பலி கொடுத்தவர்கள் எத்தனை பேர்?
எத்தனை எத்தனைக் கந்துவட்டிப் பலிகள்:
நாமக்கல் - தர்மபுரி பகுதிகளில் கந்துவட்டிக் கட்ட முடியாமல் தவித்துப் போன தாய்மார்கள் கந்து வட்டி மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டனர். மதுரை-திருப்பூர் பகுதிகளில் துரத்திப் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுவோம் என அஞ்சிக் குடும்பம் குடும்பமாக விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். சீர்காழி – நாகை போன்ற பகுதிகளில் கடன் வாங்கிக் கந்துவட்டிக் கட்ட முடியாமல் தூக்குப் போட்டுச் செத்துப் போன விவசாயிகள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறு நகர - பெருநகர அங்காடிகளில் அன்றாடத் தெருவோரக் கடை பரப்பிச் சிறுவணிகம் செய்துவரும் உழைப்பாளிகள் ரூ 1000க்கு உடனடியாக ரூ 200 வட்டி கொடுத்த பின் கடன்
வாங்கிப் பிழைத்து வருகிறார்கள். மழை வந்து, காய்கறி அழுகிப்போய்த் திடீர் வேலை நிறுத்தம் வந்து, அரசியல் கலவரங்கள் தோன்றி அன்றைய பிழைப்பு பாதிக்கப்பட்டால் மீட்டர் வட்டி, மணிநேர வட்டி, தண்டால் வட்டி என இந்த ஏழை உழைப்பாளிகளின் ரத்தம் ஈவு இரக்கமின்றி உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
இப்படியாக அங்கிங்கெனாதபடி சூறாவளிச் சுனாமியாகச் சுற்றிச் சுற்றி அடித்து ஏழை எளிய உழைப்பாளிகளின் உயிரை மரணப் பயத்துடன் நசுக்கிக் கொண்டிருப்பதே கந்துவட்டிப் பண்பாடு.
நீதிமறந்த நிர்வாகம்:
இதன் கொடிய பிடியினுள் மீட்கப்பட முடியாதபடி மாட்டிக்கொண்ட எசக்கி முத்துக் குடும்பத்தார் பட்டப்பகலில் யாரும் பார்க்கும்படி அக்கினிப் பிழம்பாகக் கொழுந்து விட்டு எரிந்து ஒட்டுமொத்தமாகச் சாம்பலாகிப் போயினர்.
இக்காணொளி காட்சியை உலகமே கண்டு கண்கலங்கியது. திருநெல்வேலி மாவட்டக் கட்சித் தலைவரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் ஞானோதயம் பெற்றவராக, கந்துவட்டிக்காரர்களைக் கண்டுபிடித்து விசாரித்துத் தண்டிப்பதாக அறிவித்தார்கள். வாயில்லாப் பேதை உழைப்பாளிகளும், வக்கில்லா ஏழைத் தொழிலாளரும் நாதியில்லாமல் தம் சொந்தத் தாய் மண்ணிலேயே கந்துவட்டித் தீயில் பொசுங்கியதைக் கண்டார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். தமிழக அரசின் நிர்வாகம் ஆட்சி திறமையில்லாமல் நிர்வாணப்பட்டுப் போய் இந்த மாதிரியான அவலங்களை உருவாக்குவதாக அடையாளம் கண்டார்கள். கட்டுரை எழுதினார்கள்; கவிதை வடித்தார்கள். கேலிச் சித்திரம் தீட்டினார்கள்.
அப்படிக் கேலிச்சித்திரம் ஒன்றினைத் தாமே வரைந்து உருவாக்கி முகநூலில் வெளியிட்டார் பத்திரிக்கையாளர் பாலா. கரிக்கட்டையான பச்சைக் குழந்தையின் சடலத்திற்கு முன்னால் அம்மணப்பட்டுப்போன தமிழக அரசின் ஆட்சியாளர்கள் பணக் கற்றைகளால் தத்தம் மானத்தை மறைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருந்தார். இதைக் கண்ட ஆட்சியாளரும் நிர்வாகத்தினரும் என்ன செய்திருக்க வேண்டும்? தலைவிரித்துத் தாண்டவமாடிய கந்துவட்டிக் கொடுமையைக் கட்டவிழ்த்து விட்ட கேவலப் பிறவிகளை அடையாளம் கண்டு தண்டித்திருக்க வேண்டும்.
அவர்களுக்குக் காமதேனுவாக இருந்து கருப்புப் பணத்தைச் சுரந்து வழங்கிக் கொண்டேயிருக்கும் வெள்ளை வேட்டிச் சீமான்களையும், காக்கிச்சட்டைக் கோமான்களையும் அள்ளிப் போட்டு அர்ச்சனை செய்திருக்க வேண்டும்.ஏழை எளியோரைக் காவு கொடுக்கும் கந்துவட்டிப் புழக்கத்திற்குக் கருமாதி செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, அந்த எசக்கிமுத்து குடும்பத்தார், அண்டை அயலாரோடு ஏற்பட்ட தகராறுகளை முன்னிட்டுத்தான் தீக்குளித்துக்கொண்டனர் எனத் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். சமூகப் பொறுப்போடு கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்ட தனிப்பட்ட பத்திரிகை ஆசிரியர் பாலாவைச் சட்ட முறைமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் வீடு புகுந்து கைது செய்து, அவரது கணினி – அலைபேசி போன்றவற்றைக் கைப்பற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
அந்தக் கேலிச் சித்திரத்தால் தன்மானம் கப்பலேறியதாகச் சொல்லி நல்ல பிள்ளை வேஷம் போட்டார்கள். தகவல் தொழில்நுட்பச் சட்டம் - எண் 67இன்படி அந்தப் பத்திரிக்கையாளர் நாணக்கேட்டைப் பரப்பியதாகவும், இந்திய தண்டனைச் சட்டம் எண் 501இன் படி மானப்பறிப்புச் செய்ததாகவும் வழக்குத் தொடுத்தார்கள்.
யார்தான் குற்றவாளி?
நிர்வாகச் சீர்கேட்டினால் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த அரசின் ஆட்சியாளரையும் ஆளும் வர்க்கத்தினரையும், அலுவலர்களையும் தாம் அசிங்கப்படுத்த வில்லை என்பதை அந்தப் பத்திரிகையாளர் நீதி மன்றத்தில் எண்பித்துக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
கந்துவட்டிக்குத் துணைபோனவர்கள் யார் யார்? தங்களின் அடாவடி நடவடிக்கைகளாலும், குறட்டைவிட்டுத் தூங்கியதாலும் எசக்கி முத்துக் குடும்பத்தாரைத் தீக்குளிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றவர்கள் குற்றவாளிகளா?
கந்துவட்டியை எதிர்த்துப் போராடிய எசக்கி முத்துக் குடும்பத்தாரும், அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் பொறுப்பாக எடுத்துச் சொன்ன பத்திரிகையாளரும் குற்றவாளிகளா?
ஒழியட்டும் கந்துவட்டி:
கல்வி, சிறுதொழில், குறுநில வேளாண்மை, குடும்பச் செலவு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற அடிப்படைத் தேவைக்காக ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் தாய்மார்களும் கடன் வாங்கித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. குறைந்த வட்டிக்கு அரசு வங்கிகளில் கடன் வாங்கிப் பிழைப்பை நடத்தலாம் எனில், அந்த வங்கிகளின் அணுகுமுறைகள் ஏழைகளை அரவணைக்கும் விதத்தில் பெரும்பாலும் இல்லை. டாஸ்மாக்கிற்கு அடிமைகளாகிப் போன கணவன்மார்களையோ, ஏழைகளைத் துரத்தியடிக்கும் வங்கிகளையோ, நம்பிக் குடும்பம் நடத்திப் பிழைப்பைக் கவனிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில்தான் பெரும்பாலான ஏழை எளிய குடும்பங்களின் தாய்மார்கள் கந்துவட்டி அரக்கன்களின் உடல் பசிக்கு இலக்காகி விடுகிறார்கள்.
ஏழை உழவர்களையும், எளிய தொழிலாளர்களையும் வாழவைக்கத் துடிக்கும் சமூக ஆர்வலர்களும், சட்டம் படித்த வழக்கறிஞர்களும், பொறுப்புள்ள இதழாளர்களும், சமூக மாற்றம் வேண்டி நிற்கும் இளையோரும் இங்குத்தான் கரம்கோர்த்துச் செயல்படவேண்டிய தேவை எழுகிறது.
எசக்கிமுத்து குடும்பத்தார் போன்று கந்துவட்டியால் சித்திரவதைக்குள்ளாகும் ஏழை எளியோரை அடையாளம் காண வேண்டும். அவர்களைத் துன்புறுத்தும் கந்துவட்டிக்காரர்களையும், அவர்களுக்குத் துணைபோகும் அரசுத்துறை ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஏழைகளை வெறுத்துப் புறந்தள்ளாமல் அவர்களை அரவணைத்து உதவியளிக்கும் பொருளாதார மையங்களாக அரசு வங்கிகள் செயல்படத்தக்க விதத்தில் சட்டம் உருவாக்கிட வேண்டும். “உழைப்பைச் சுரண்டும் கந்துவட்டிக்குச் சமாதி, உழைப்பை நம்பும் அனைவருக்கும் அமைதி”என்ற நேரிய பண்பாட்டை உருவாக்காமல், நம் இந்தியா வல்லரசாகத் தலைநிமிர முடியாது.